வெற்றிகரமாக திறக்கப்பட்டது 450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தமிழக சட்டப்பேரவை கட்டிடம்
தினமலர் சிறப்பு செய்தி இதோ உஙகள் பார்வைக்கு.....
தமிழக அரசின் கழுத்தை நெரிக்கும் கடன் சுமை ரூ.73 ஆயிரம் கோடி : ஒவ்வொருவர் தலையிலும் 10,000 ரூபாய் விடியும்
நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் வாங்கும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், திருப்பிச் செலுத்தும் அளவு குறைவாகவே உள்ளது. இதனால், தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும், 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப் பட்டுள்ளது.
மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலில் ஒவ்வொரு லிட்டருக்கும் வசூலிக்கப்படும் கட்டணத்தில் பாதியளவு மாநில, மத்திய அரசுகளுக்கு வரியாகப் போகிறது. சாலை வரி, கல்வி வரி போன்ற சேவை வரிகள், சம்பளம் வாங்குவோரிடம் மாநகராட்சிகள் வசூலிக்கும் தொழில் வரி, இது தவிர ஆண்டுதோறும் வருமான வரி என, அனைத்து விதத்திலும் வரிகளைச் செலுத்தி, நடுத்தர வர்க்கத்தினர் தடுமாறிக் கொண்டுள்ளனர். மக்களின் இந்தச் சுமையை குறைக்க வேண்டிய அரசு, மேலும் மேலும் கடனை வாங்கி, அதைச் சரிகட்ட, இது போன்று புதுப்புது வழிகளில் வருவாய் தேடி வருகிறது. கடந்த நான்காண்டு காலத்தில், தமிழக அரசு எந்த பொருளுக்கும் வரியை உயர்த்தாவிட்டாலும், "டாஸ்மாக்' வருமானம் மற்றும் உள்ளாட்சிகள் மூலம் வருவாய் உயர்வு போன்றவற்றால் சமாளித்து வருகிறது. அதே சமயம், கடன் வாங்கும் அளவும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில், தமிழக அரசுக்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது.
கடந்த 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, முந்தைய அரசு 28 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறி, புதிய வரிகளை விதித்தார். இதனால், மக்கள் மீதான சுமை அதிகரித்தது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், தமிழக அரசின் கடன் 53 ஆயிரம் கோடியாக உயர்ந்து இருந்தது. இப்படி மாறி மாறி கடனை வாங்கினாலும், அதை நியாயப்படுத்தவும் ஆளுங்கட்சிகள் தவறவில்லை. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள கடன் வாங்குவது அவசியம் என்றும், கடன் வாங்காமல் எந்த அரசும் செயல்பட முடியாது என்றும் நியாயப்படுத்துகின்றனர்.
கடந்த 1988-89 வரை, கடன்கள் ஆண்டுக்கு 1,027 கோடி, 1,554 கோடி ரூபாய் என்ற அளவில் தான் வாங்கப்பட்டது. திருப்பிச் செலுத்தியது போக, மீத கடன் சுமை, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் அளவில் இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த கடன் சுமை தான், மொத்தமாக இன்றைக்கு 73 ஆயிரம் கோடி ரூபாயாக தமிழகத்தின் மீது உள்ளது. ஏறத்தாழ, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் பெயரிலும் 10 ஆயிரம் ரூபாய் கடன் சுமை உள்ளது. ஏற்கனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிதி பொறுப்புடைமைச் சட்டப்படி, மாநில அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு மேல் கடன் பெறக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது. அதற்கு மேல் கடன் வாங்கினால், மாநிலத்தின் நிதி நிலைமை பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம். காரணம், அதற்கு மேல் கடன் வாங்கினால், வட்டியை மட்டுமே கட்ட முடியும்; அசலை திருப்பிச் செலுத்த முடியாது.
தமிழகத்தை பொறுத்தவரை, 10 சதவீதத்துக்கு உள்ளாகவே கடன் வாங்குகிறோம் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு குறைவாகவே, பட்ஜெட் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. பொதுக் கணக்கை மட்டும் பார்க்காமல் மற்றவற்றையும் சேர்த்தால், 3 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக் கும் என்பது தான் உண்மை. முந்தைய ஆட்சிகளில் கடனை திருப்பிச் செலுத்தும் அளவு கூடுதலாக இருந்தது. 1999ல் 8,545.81 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்ட போதிலும், 5,438.15 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டது. கடந்த 2000ம் ஆண்டில், 11 ஆயிரத்து 596 கோடியே 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 7,719 கோடியே 99 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டது. 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில், 65 ஆயிரத்து 627.63 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு, 34 ஆயிரத்து 844.71 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கடன் வாங்குவது குறைந்தும், திருப்பிச் செலுத்துவது அதிகரித்தும் வந்ததைக் காண முடிகிறது. கடந்த 2006ல் தி.மு.க., அரசு அமைந்த பின், 53 ஆயிரத்து 526.63 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு, இதுவரை 19 ஆயிரத்து 155.84 கோடி ரூபாய் தான் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியை விட தி.மு.க., ஆட்சியில் குறைவான அளவே கடன் வாங்கப்பட்டிருந்தாலும், திருப்பிச் செலுத்தும் தொகை மிகக் குறைவாக இருந்ததால், கடன் சுமை அதிகரித்துள்ளது.
பொதுக் கடனை பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளில் பெற்ற கடனுக்கான அசல் மற்றும் வட்டி அடுத்தடுத்த ஆண்டுகளில் தான், திருப்பிச் செலுத்தப்படுகிறது. இருந்தாலும், கடன் சுமையைக் குறைக்க, திருப்பிச் செலுத்தும் தொகையை அதிகரித்து இருக்கலாம். ஆண்டுதோறும் பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக கடன் வாங்கி ஈடுகட்டுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறு ஈடுகட்டப்பட்டு, அதிகரித்துள்ள கடன் சுமை ஒவ்வொன்றும் மக்கள் தலையில் தான் விடியும்.
அதிகமானது எப்படி? கடந்த 1989ம் ஆண்டில் கடன் 602.31 கோடி, 1990ல் 755.60 கோடி, 1991ல் 874.36 கோடி, 1992ல் 943.78 கோடி, 1993ல் 1,044.68 கோடி, 1994ல் 1,625.71 கோடி, 1995ல் 1,192.57 கோடி ரூபாய் என, திருப்பி செலுத்திய பின், ஆண்டுதோறும் கடன் சுமை இருந்து வந்தது. பின்னர் அமைந்த தி.மு.க., ஆட்சியில், 1996ல் 1,442.26 கோடி, 1997ல் 1,724.92 கோடி, 1998ல் 2,159.64 கோடி, 1999ல் 3,107.66 கோடி, 2000ம் ஆண்டில் 3,876.04 கோடி என, கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. அதன் பின் அ.தி.மு.க., ஆட்சியில், 2001ம் ஆண்டு 3,445.20 கோடி, 2002ல் 7,251.91 கோடி, 2003ல் 5,195.36 கோடி, 2004ல் 4,948.32 கோடி, 2005ல் 5,644.53 கோடி ரூபாய் என அதிகரித்தது. தற்போதைய அரசு அமைந்த பின், 2006ல் 2,456.91 கோடி, 2007ல் 4,643.03 கோடி, 2008ல் 9,482.21 கோடி, 2009ல் 9,928.71 கோடி ரூபாய் என, திருப்பித் தராத கடன் சுமை அதிகரித்துள்ளது.
நன்றி தினமலர்
இந்திய அரசியல் வியாபாரிகளின் கலப்பட கபடத்தால் கடலில் புதைந்த கோடிகளும், அரசியல் வியாதிகளின் சட்டை பைக்குள் புகுந்த கோடிகளுமாய் சாட்சியும், கண் நோகும் காட்சியும் அரங்கேறி வெள்ளி விழா கண்ட நாற்றமடிக்கும் நாடகம் தான் சேது சமுத்திர திட்டம்......
தினமலர் செய்தி..
சேது சமுத்திர திட்டத்தின்படி ஏற்கனவே மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த மணல்வாரும் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட் டன. மணல் வாரும் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரங்கள் அனைத்தும், கடல் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டன.
சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்னை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் படி கடந்த ஓராண்டுக்கு முன்பு பச்சவுரி கமிட்டி அமைக்கப்பட்டது. விரைந்து அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்த கமிட்டி ஏற்கனவே இரண்டு முறை மட்டுமே கூடி ஆலோசசனை செய்திருந்த நிலையில், நேற்று டில்லியில் இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கை விசாரித்துவரும் சுப்ரீம் கோர்ட், இப்பிரச்னையில் தங்களது நிலைப் பாட்டை மத்திய அரசு அடுத்தமாதம் இரண்டாவது வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சேது சமுத்திர திட்டத்திற்கு கோர்ட் தடை விதிக்கப்பட்ட 2008ம் ஆண்டு ஜூலை 16ம் தேதியிலிருந்து, எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி ஆகிய இரு இடங்களிலும் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன. அங்கு டிரெட்ஜிங் எனப்படும் மணல்வாரும் பணியில் இருந்து, இயந்திரங்கள் அனைத்தும் திருப்பி அழைத்துக் கொள்ளப் பட்டுவிட்டன.
சேது திட்டத்திற்காக மணல்வாரும் இயந்திரங்களை மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கு சொந்தமான டிரெட்ஜிங் கார்ப்பரேஷன்தான் வழங்கி வந்தது. இந்த அனுமதியை கப்பல் போக்குவரத்து அமைச்சம் நிறுத்தி வைத்துவிட்டது. மணல்வாரும் இயந்திரங்களுக்கான வாடகைக் கட்டணமான, 300 கோடி ரூபாயை மத்திய அரசின் டிரெட்ஜிங் கார்ப்பரேஷனுக்கு, சேது சமுத்திர திட்ட கார்பரேஷன் வழங்கவில்லை என்பதே இதற்கு காரணம். 2005ம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 700 கோடி ரூபாய்வரை இந்த திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ளது. மூலதன டிரெட்ஜிங் மற்றும் மெயின்டனன்ஸ் டிரெட்ஜிங் என இரு வகைகளாக பணிகள் நடைபெற்றன. ஏற்கனவே வாரப்பட்ட இடங்களில், இப்போது மேலும் மணல் படிந்துள்ளதும், இதுபோல் படிந்துள்ள மணல் எவ்வளவு என்பது பற்றிய விவரங்கள் எதுவும் தற்போது கணக்கிட முடியவில்லை. இதையெல்லாம் சேது சமுத்திர திட்ட கார்பரேஷன்தான் செசய்ய வேண்டும்.
இரண்டாயிரத்து 400 கோடி ரூபாயில் துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் மதிப்பு நான்காயிரத்து 500 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த திட்ட மதிப்பீட்டு உயர்வு குறித்து, இனி மத்திய அமைச்சசரவைக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதற்கு முன்பு கூடிய பச்சவுரி கமிட்டி, சேது திட்டம் குறித்து கோவாவில் உள்ள இன்ஸ்டிடியூட் மூலமாக ஆராய்ச்சி செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தது. அந்த ஆராய்ச்சிக்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் பெற்றுக் கொண்ட கப்பல்போக்குவரத்து அமைச்சகம் அதுபற்றி மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி தினமலர் நாளிதழ்.
இன்னும் எவ்வளவு காலம் நாம் திரும்ப திரும்ப தாக்கப்படுவோம்...
என்று முதல் நாம் அன்னியர்களால் தாக்கப் படுகிறோம், என்று முதல் நமது அப்பாவி இந்திய மக்கள் கொல்லப்படுகிறார்கள்? இன்னும் எவ்வளவு காலம் நாம் திரும்ப திரும்ப அன்னிய அட்டூழியங்களுக்கு ஆளாவோம்? இதற்கு யார் காரணம்..யார் பொறுப்பு?
கி.பி.12-ம் நூற்றாண்டில் தைமூர் படையெடுத்தது தொடங்கி முகம்மது கோரி, முகம்மது கஜினி,அலாவுதீன் கில்ஜி,குத்புதீன் அய்பெக்....... ஒளரங்கசீப் வரை இப்படியாக முகம்மதிய படையெடுப்புகளாலும் அதன் பின்னர் ஆங்கிலேயர்களாலும் தொடர்ந்து கொல்லப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் வந்த நமது ஆருயிர் இந்திய சகோதரர்கள் இன்று தீவிரவாதிகளின் குறியாகி இருப்பது வேதனைக்குரிய விசயம்...
ஏன் தாக்க படுகிறோம்?..
காய்த்த மரம்தானே கல்லெறி படும்,அன்று மொகலாய மன்னர்கள் நம்மை நோக்கி படையெடுத்து வந்து லட்சக்கனக்கில் கொன்று குவித போது அவர்கள் கண்ணில் தெரிந்தது நம்முடைய செல்வ செழிப்புதான், வறண்ட பாலைவனங்களில் ஆட்சி புரிந்து அதை தவிர வேறெதுவும் தெரியாத அவர்களுக்கு நமது தேசம் ஒரு காய்த்த மரமாகவே தோன்றியது. பின்னர் வந்த ஆங்கிலேயர்களும் அதே கதை தான். ஆனால் இன்று திரும்பவும் நாம் தாக்கப்படுவது எதனால்?
கல்லெறிபட்டு பட்டு, பட்டுப்போன மரம் இன்று மீண்டும் செழித்து வளர்ந்து அன்றிருந்ததை விட சிறப்பானதொரு நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதுவும் ஒரு காரணம்.
எதனால் நம்மால் நம்மை இவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியவில்லை என்று யோசித்து பார்த்தோமானால், அன்றைய இந்தியாவில் நமது குறுநில மன்னர்கள் அனைவரும் இணைந்து வடக்கில் இருந்து அன்னியர்கள் ஊடுறுவிய முக்கிய வழியான கைபர் கணவாய் பகுதியில் ஒரு கோட்டையை அமைத்து அதில் மிகச்சிறப்பான ஒருங்கிணைந்த படை வீரர்களை நிறுத்தி இருந்தால் எதிரிகளை ஊடுருவும் முன்பு அங்கேயே அடித்து விரட்டி இருக்கலாம். லட்சக்கணக்கான இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். கோடிக்கனக்கில் தங்கமும் வைடூரியமும் வைரமும் நம் நாட்டை விட்டு போயிருந்திருக்காது.நாம் இன்று ஏழை நாடாக இருந்திருக்க மாட்டோம்.
இந்த வறலாற்றிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறது. தற்காப்பு என்பது அதிரடியாக செயல்படுவதில்தான் இருக்கிறது.
இவர்களை பாதுகாக்க வேண்டியது யார் பொறுப்பு?
நாம் செய்யவேண்டியது என்ன... தீவிரவாதத்திற்கு எதிராக மென்மையான அணுகுமுறையை கைவிட வேண்டும்.தீவிரவாதத்திற்கு எதிராக பொடா போன்ற பயங்கர சட்டங்களை கையாள தயங்கக்கூடாது.
அதிரடியாக செயல்படுவோம். தாக்கபடுவதிலிருந்து தற்காத்துக் கொள்வோம். ஜெய் ஃகின்ந்
மிக கோரமாக நடந்து முடிந்த சட்ட கல்லூரி மாணவர்களின் மோதலில் தமிழகமே தலை குனிந்து நிற்கிறது. ஏன் இந்த மோதல்? மாணவர்களின் உரிமையை நிலை நாட்டவா? நாட்டினை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லவா? எதற்காக இந்த மோதல்...
சற்று சிந்தித்து பார்த்தால் சட்ட கல்லூரியில் நடந்த இந்திய தமிழக அவலம் தெளிவாக புலப்படும்..சட்ட கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல அனைத்து மாணவர்களும் சிந்திக்க வேண்டிய முக்கியமான விசயம் ஒரு மாணவராக உங்களது கடமை என்ன, எதற்காக கல்லூரிகளுக்கு செல்கிறீர்கள், நீங்கள் செய்யும் இத்தகைய காரியங்களை உங்கள் பெற்றோர் விரும்புவார்களா, இந்த சமுதாயம் உங்களிடம் விரும்புவதைதான் நீங்கள் செய்கிறீர்களா என்பதை சிந்தித்து செயல்படுங்கள்.
மாணவர்களின் இந்த மோதலையும் போராட்டங்களையும் சில மாணவ பிரதிநிதிகள் சமுதாய சிந்தனையாக கருதுவது வேதனைக்குரிய விசயம். எது சமுதாய சிந்தனை எது உனர்ச்சி போராட்டம் என்பதை உன்னிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். பிற்போக்குத்தனமான ஜாதிய மோதல்கள் உங்களை எந்த ஒரு உயர்ந்த லட்சியதிற்க்கும் இட்டுச் செல்லாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இந்த நிலையில் நமது மரியாதைக்குரிய முதல்வரும் எதிர்கட்சி தலைவரும் மாணவர் சமுதாயத்தை நல்வழி படுத்துவதை விட்டு விட்டு வழக்கம் போல் தங்களுக்குள் அடித்து கொள்ளுவது வேடிக்கையிலும் வேடிக்கை. எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் அதை தீர்ப்பதை விட்டு திசை திருப்புவதிலேயே குறியாக இருக்கும் கருணாநிதியும், இவற்றையெல்லாம் தனக்கு சாதகமாக்க முயலும் ஜெயலலிதாவும் தமிழகத்திற்கு முதல்வராகவும் எதிர் கட்சி தலைவராகவும் அமைந்தது உன்மையில் தமிழகத்தின் துரதிர்ஷ்டமே. எல்லாவற்றிற்கும் ஒரு மாற்றம் உண்டு என்பதை இவர்கள் புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வரும் என்பதை மறந்து விடக் கூடாது.
WE NEED A POLITICAL REVOLUTION.
அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்
இயற்கை எழில் மிகுந்த அருமையான சுற்றுபுற சூழ்நிலையுடன் கூடிய குமரி மாவட்டதின் தென் பகுதியில் கன்னியாகுமரிக்கு 8 கிலோ மீட்டர் வடக்கு புறமாகவும் நாகர்கோவிலுக்கு 18 கிலோ
மீட்டர் கிழக்கு புரமாகவும் திருனெல்வேலிக்கு 38 கிலோ மீட்டர் தெற்கு புரமாகவும் அமைந்ததுதான் அஞ்சுகிராமம் என்ற அழகிய கிராமம் நகருக்கே உரிய வியாபார தலங்களுடன் கூடிய அழகான கிராமம்தான் அஞ்சுகிராமம்.
அது சரி திருவள்ளுவர் எப்டின்னு கேட்கிறீர்களா? அட ஆமாங்க! திருவள்ளுவர் பிறந்தது நம்ம அஞ்சுகிராமத்தில தாங்க.... கூடிய விரைவில் அரசின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வரபோகுது.. நான் சொன்னா எங்கே நம்ப போறீங்க... அப்புறம் சொல்லுவீங்க. அட ஆமான்னு.....
இத்தகைய சிறப்புகளுடன் கூடிய அஞ்சுகிராமம் பற்றியதுதான் இந்த வலைபதிவு.
அஞ்சை இளைஞர் அணிக்கு ஈடு அஞ்சை இளைஞர் அணி மட்டுமே.... இதுவே அஞ்சுகிராமம் ஊர் நல முன்னேற்ற சங்கத்தின் முதுகெலும்பு......
அஞ்சு கிராமம் இளைஞர்களின் சொர்க்க பூமி தொட்டி ஏரியா என்று செல்லமாக அழைக்கப்படும் பேருந்துநிலையத்தின் எதிர்புறமுள்ள வட்ட கிணறும் அதை சார்ந்த பகுதியும் ஆகும்.
ஊர் நல முன்னேற்ற சங்கம் அஞ்சுகிராமம் வாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இளைஞர்கள் மற்றும் பெரியோர்களின் பெரும் முயற்ச்சியின் பலனாக தொட்டி ஏரியா அருகில் மாதாமாதம் கூடும் சிறு கூட்டமாக தொடங்க பட்டது. சிறு கூட்டமாக இருந்தாலும் அதிலிருந்து கிளம்பிய பொறி பெரும் தீப்பிளம்பாக தகதகக்க ஆரம்பித்தது.
கன்னியாகுமரி (Kanniyakumari)
தலைநகரம் : நாகர்கோவில் பரப்பு : 1,684.4 ச.கி.மீ
மக்கள் தொகை : 1,669,763 எழுத்தறிவு : 1,320,564 ( 88.11%)
ஆண்கள் : 829,542 பெண்கள் :840,221
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 992
பெயர் வரலாறு:
சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக 'கன்னியாகுமரி' என்று அழைக்கப்பட்டது. குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.
உள்ளாட்சி நிறுவனங்கள்:
நகராட்சிகள்- 4, (நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை);
நகரியம்-1 (கன்னியாகுமரி);
ஊராட்சி ஒன்றியம் - 9; பேரூராட்சிகள் - 67; ஊராட்சி-88.
சட்டசபை தொகுதிகள்:
7 (கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர்.
நாடாளுமன்ற தொகுதி-
1 (நாகர்கோவில்).
வழிபாட்டிடங்கள்:
கன்னியாகுமரி- பகவதியம்மன்; சுசீந்திரம்- தாணுமாலையன் கோவில்; நாகர்கோவில்- நாகராஜா கோவில், முந்திரிதோப்பு- வைகுண்டசாமி அய்யா, திருவட்டார்- ஆதிகேசவப் பெருமாள்; கோட்டாறு- சவேரியார் கோவில். தக்கலை- ஞானி பீர்முகமது மசூதி.
பன்னிரெண்டு சிவாலயங்கள்:
திருமலை, திக்குரிச்சி, திருப்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் என்ற 12 சிவாலயங்கள் இம்மாவட்டத்தில் உண்டு. சிவராத்திரி அன்று பக்தர்கள் இச்சிவாலயங்களை நோக்கி உச்சரித்துக் கொண்டே ஓடுவர். அதற்கு 'சிவாலயம் ஓடுவது' என்று பெயர். கடைசியாக தாணுமாலயனை வணங்குவது வழக்கம்.
மாவட்டத்தில் குறிப்பிடத்தக்கோர்:
தொல்காப்பியர், அதங்கோட்டாசான், திருவள்ளுவர் போன்ற பழங்கால தமிழ் அறிஞர்களும், இக்காலத்தில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, நூறு அவதானங்களை செய்த சதாவதானி செய்குத்தம்பி பாவலர், டி.கே. எஸ். சகோதரர்கள், தோழர் ஜஂவானந்தம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பேரா பா. நடராசன், நாஞ்சில் மனோகரன் போன்றோர் முக்கியமானவர்கள்.
வரலாற்றில் கன்னியாகுமரி:
வட வேங்கடம் முதல் தென் குமரி வரையுள்ள பகுதி, தமிழ் கூறும் நல்லுலகம் என்று தொல்காப்பியத்திற்கு முன்னுரை வழங்கிய அதங்கோட்டாசான் குறிப்பிடுகிறார். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்த ஏராத் தோனஸ் என்ற அயல்நாட்டுப் பயணி குமரிமுனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெரிபுளூஸ், தாலமி இப்பகுதி பற்றி தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். மதுரை தொடங்கி குமரி வரையுள்ள பகுதி 'பாண்டி மண்டல'மாக இருந்தது. அதனால் இப்பகுதிபாண்டியர்களால் ஆளப்பட்டு வந்தது. இதற்கான சான்றுகளாக காட்டக்கூடிய ஊர்கள்: பாண்டியன் அணை, பாண்டியன் கால்வாய், பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம் என்ற பெயர்களால் உறுதிப்படுத்தப்படுகிறது. பாண்டிய பேரரசு குலைந்த பின்னர் இப்பகுதி மூன்றாகத் திகழ்ந்தது. 1) புறத்தாய நாடு (கன்னியாகுமரியும் அதன் சுற்றுப்புறங்களும் சேர்ந்த பகுதி) 2) நாஞ்சில் நாடு (அகத்தீஸ்வரம், தோவாளை வட்டங்களில் புறத்தாய நாடு நீங்களான பகுதி) 3. வேணாடு (கல்குளம், விளவங்கோடு) என்னும் இரு வட்டங்களையும் கொண்டது. முதலாம் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் சோழராட்சிக்கு உட்பட்ட வேளையில் இப்பகுதியும் சோழராட்சியின் கீழ் வந்தது. சேரநாட்டின் பாஸ்கர ரவியை தோற்றோடச் செய்து, அவன் கப்பற்படையைத் தீயிட்டு பொசுக்கினான் இராஜராஜன். அதனால் இராசராச சோழனுக்கு 'கேரளாந்தகன்' (கேரளனுக்கு எமன்) என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது. சோழர்களின் கல்வெட்டு குகநாதசாமி கோயிலில் கிடைக்கிறது. இதுதவிர, மும்முடிச் சோழபுரம், சோழ கேரளபுரம், ராஜ நாராயண சதுர்வேதி மங்கலம், சுந்தர சோழசதுர்வேதி மங்களம் போன்ற ஊர்களின் பெயர்கள் சோழராட்சிக்கு சான்றாகும். நாஞ்சில் நாட்டு வளம்- நாயக்கர்களால் பலமுறை கொள்ளையிடப்பட்டது. திப்பு சுல்தானின் படையெடுப்பையும் இப்பகுதி கண்டிருக்கிறது. 1729 முதல் 1949 வரை இப்பகுதி திருவிதாங்கூர் மன்னராட்சியில் இருந்து வந்தது. 1945 இருந்து 1956 வரை குமரி மாவட்ட தமிழர்கள் போராடி, சில பகுதிகளைப் பெற்று தமிழ்நாட்டுடன் இணைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பிறந்த கதை: 1949க்குப் பின்னர் திருவாங்கூர்-கொச்சி அரசின் கீழ் தமிழர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டது. ஐக்கிய கேரளத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதையும் சேர்ப்பதற்கு மலையாளிகள் முயன்றனர். 1945ம் ஆண்டு முதல் மொழியை வைத்து தமிழ் பேசும்பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று தமிழர்கள் போராட ஆரம்பித்தனர்.1945 ஆம் ஆண்டு திருவாங்கூர் தமிழர் உரிமைப் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. குழுவில் பி.எஸ். மணி, இரா. வேலாயுதம், கே.நாகலிங்கம், காந்திராமன், ஆர்.கே. ராம், முத்தையா, மார்க்கண்டன் ஆகியோர் முன்முயற்சியில் எஸ். நத்தானியேல் தலைமையில் அகில திருவாங்கூர்த் தமிழர் காங்கிரஸ் என்ற அமைப்பினைத் தோற்றுவித்தனர். பின்னர் திருத்தம் செய்யப்பெற்று திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனப் பெயர் மாற்றம் பெற்றது. கதவடைப்பு, கருப்புக் கொடி ஊர்வலம் என்கிற முறையில் தமிழர் அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்திய விடுதலைக்கு பின்னர் திருவிதாங்கூரில் கேரள காங்கிரஸ் ஆட்சி தொடங்கியது. 1948 தேர்தலில் 4 வட்டங்களில் வெற்றி பெற்றனர் தமிழர். பட்டம் தாணுப்பிள்ளை முதல்வராக இருந்த இந்த காலக் கட்டத்தில் தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திப் பலரைக் கொன்றனர். பலர் மீது வழக்குகள் போடப்பட்டன. திருவாங்கூர்-கொச்சி ராஜ்ய இணைப்பை எதிர்த்து நேசமணி போராட்டம் நடத்தினார். 1954 ஆகஸ்ட் 11ம் நாள் விடுதலை நாளாக கருதப்பட்டு அறப்போராட்டங்களை நடத்தினர். தொடுவட்டியிலும், மார்த்தாண்டத்திலும் துப்பாக்கிச் சூட்டில் பல தமிழர்கள் உயிரிழந்தனர். 1955இல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றி பட்டம் தாணுப்பிள்ளையின் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது.
தமிழர்கள்அதிகமாக வாழ்ந்து வந்த பகுதிகள்: தோவாளை, அகத்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றங்கரை தேவிக்குளம்,பீர்மேடு, சித்தூர் வட்டங்களை தமிழ் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று வேண்டுகோளை 1955 அக்டோபர் 10 ஆம் நாள் இந்திய அரசிடம் அளித்தனர். ஆனால் இந்திய அரசோ தேவிக்குளம், பீர்மேடு, சித்தூர், நெய்யாற்றங்கரை பகுதி நீங்கலாக மற்ற பகுதிகளை இணைத்து கன்னியாகுமரி மாவட்டம் உருவானது. இதற்கான சட்ட வரைவு 1956 ஆம் ஆண்டு சென்னை சட்டசபையிலும், இந்திய பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது.
தமிழரின் பாரம்பரிய பகுதிகள் இழந்ததன் வாயிலாக பெரியார், சிறுவாணி, மற்றும் உள்ள ஆறுகள் தமிழக விவசாயத்திற்கு கிடைக்காமல் வீணாக அரபிக்கடலில் கலப்பதை இன்றும் காணலாம்.
கன்னியாகுமரி:
மாவட்டத்தின் எல்லைகள்: வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டம். மேற்கில் கேரளமும்; தெற்கில் இந்துமகா கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.
இந்தியாவின் தென்கோடி முனையாக காட்சியளிக்கிறது. இவ்வூரிலேயே காலையில் சூரியோதயத்தையும், மாலையில் மறைவையும் கண்டு களிக்கலாம். சித்ரா பெளர்ணமியன்று சூரியன் மறைவதையும் சந்திரன் பெரிய பந்து போலத் தோன்றுவதையும் வேறு எங்கும் காண முடியாது. இந்துமகாக் கடல், வங்காள விரிகுடா, அரபிகடல் இவை மூன்றும் சங்கமமாவது இங்குதான். குமரித் துறையில் உள்ள கன்னியாகுமரியின் கோவில் பார்க்கத்தக்கது. கடல் நடுவில் உள்ள பாறைவிவேகானந்தரின் நினைவுப் பாறை என்று அழைக்கப்படுகிறது. 1892 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இங்கு வந்து ஸ்ரீபாத பாறையில் அறிவு விளக்கம் பெற்று சென்றதை நினைவு கூறும் வண்ணம் இங்கு 1970 ஆம் ஆண்டு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இது போலவே காந்தியண்ணலின் அஸ்தி கரைக்கப்பட்டதை நினைவு கூறும் வண்ணம், வட இந்திய பாணியில் இங்கு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அண்ணாவின் பிறந்த நாளான அக்டோபர் 2ந் தேதி சூரிய ஒளி இங்குள்ள மண்டபத்தில் விழும்படி கட்டப்பட்டுள்ளது. குகநாதசாமி கோயில் பழைமையானதாகும். இக்கோவிலில் இராசராசன் காலத்து கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அடுத்து பார்க்க வேண்டியது அரசு அரும்காட்சி சாலை. கலங்கரை விளக்கத்திலிருந்து இயற்கை காட்சிகளையும், கடற்காட்சிகளையும் காணலாம்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் தலைநகராகவும் இருக்கிறது.இங்குள்ள நாகராஜா கோவில் பார்க்கத்தக்கது. இதன் வாயிலின் முகப்பு சீன முறையில் அமைந்த விகாரங்கள் பெளத்த பாணியைக் காண்பிக்கிறது. இக்கோயிலிலுள்ள தூண்களில் சமண தீர்த்தங்கர்களான மகாவீரர், பார்சுவநாதரின் உருவங்களைக் காணலாம். நாகராஜாவே முக்கிய கடவுள். இக்கோவில் முற்காலத்தில் சமணக் கோயிலாக இருந்திருக்கும் என்பது அறிஞர்கள் முடிவு. நாகர்கோவில் நகராட்சி 1900 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டது. இந்நகராட்சியின் பகுதிகள் வடசேரி, வடிவீஸ்வரம், கோட்டாறு, ஒழுகினசேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. பல கல்வி நிலையங்கள் மருத்துவமனை, போக்குவரத்திற்கும் மையமாக இருக்கின்றது. மாவட்டத் தலைநகரானதால் தொழில், வணிக நிலையமாகவும் விளங்கி வருகிறது.
சுற்றுலா இடங்கள்:
சுசீந்திரம்:
கன்னியாகுமரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தாணுமாலயன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. தமிழகப் பெருங்கோவில்களில் இது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. 135 அடி உயரமுள்ள கோபுரமும் எழுநிலை மாடமும் உடையது. இக்கோவிலில் சோழ, சேர, பாண்டிய, விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்நால்வரும் திருப்பணி செய்துள்ளனர். இக்கோவில் 9ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டதென கல்வெட்டு கூறுகிறது. அலங்கார மண்டபத்தின் கூரை ஒரே கல்லாலானது. இம்மண்டபம் சிற்பச் சிறப்புடையது. இராசராசசோழன் காலத்தில் கட்டப்பட்டது. சிவபெருமாள் (தாணு): மால் (விஷ்ணு); அயன் (பிரம்மா) ஆகிய மூன்று சிலைகளும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்திருப்பதால், தாணு மாலயப் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. கோவிலிலுள்ள அனுமார் சிலை 18 அடி உயரம் உடையது. இங்குள்ள திருமலை நாயக்கர் வடிவத்தில் காணப்படும் சிற்பத்தின் மூக்கில் வெளிவரும் அளவு நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளதைக் கண்டுகளிக்கலாம். நாட்டிய நங்கை, வெற்றிலை மடித்துத் தரும் மங்கை, குடைபிடித்த கட்டழகி போன்ற சிலைகள் உயிர் உள்ளவை போன்று இருக்கும். இதுதவிர, ஊஞ்சல் மண்டபம், சித்திரசபை, வசந்த மண்டபம், வெண்கல்லாலான நந்தி, பெரிய ஆஞ்சநேயர், கணேசன் திருவுருவம், பாவைப் பெண்களின் அரிய கலை வடிவங்கள், இந்திரனின் கதை கூறும் சுவரோவியங்கள் போன்றவை காணத்தக்கவை.
உதயகிரி கோட்டை:
மார்த்தாண்ட வர்மா (1729-1758) காலத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. இக்கோட்டையில் துப்பாக்கி வார்ப்பதற்கானதொழிற்சாலை இருந்தது. இங்கு டிலனாய் என்ற டச்சு வீரர் மார்த்தாண்ட வர்மா படையில் சேர்ந்து, உள்நாட்டு வீரர்களுக்கு படைபயிற்சியளித்து வந்தார். அவருடைய கல்லரை இங்கு காணப்படுகிறது. இக்கோட்டை நாகர்கோவில்- தக்கலை வழித் தடத்தில் உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 90 ஏக்கர் நிலப்பரப்பில், 5 1/2 மீ உயரத்திற்கு சுவர்கள் எழுப்பப்பட்டு, 4 1/2 மீ அகலத்தில் சுவர்களை அமைத்துள்ளனர். இக்கோட்டையின் உயர்ந்த பகுதியில் 'விருந்தினர் இல்லம்' இருக்கிறது.
வட்டக்கோட்டை:
குமரி மாவட்டத்திலுள்ள இரண்டாவது கோட்டை இது. கன்னியாகுமரியிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இதுவும் மார்த்தாண்ட வர்மா காலத்தில் டிலனாயினால் கட்டப்பட்டது. இக்கோட்டையின் சிறப்பு, கடலை நோக்கி அமைந்திருப்பதுதான். இது கடற்குளியலுக்கும் சுற்றுலாவுக்கும் ஏற்ற இடம்.
திப்பரப்பு அருவி:
கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. கோதையாற்றின் கரையில் அமைந்துள்ளது. நீர்வரத்து அதிகம் உள்ள காலங்களில் அருவி அழகாகக் காணப்படும். இங்கு ஆறு, அருவி, கோவில் மூன்றும் ஒருசேர பார்ப்பதற்கு அழகான காட்சிகள் ஆகும். இக்கோவில் மகாதேவர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள 2 அருவிக்கு பெயர்: பத்ரகாளி குண்டு, தெங்கம்புதூர்.
முட்டம்:
கன்னியாகுமரியிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் கடலை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு அழகான கடற்கரையும், கலங்கரை விளக்கமும் உண்டு. சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. ஊருக்குள் கடல் உள்நோக்கி அரைவட்ட வடிவத்தில் அமைந்திருப்பதாலும் ஊர் மிக உயரத்திலிருப்பதாலும் உடல் நலத்திற்கேற்ற வாழ்விடமாக இது அமைந்துள்ளது.
பேச்சிப்பாறை:
கன்னியாகுமரியிலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கும் எல்லையாகஅமைந்துள்ள மலைத் தொடரை வைத்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் பெரிய அணை இதுவேயாகும். 1894 ஆம் ஆண்டு கோதையாறு அணைத்திட்டம் தொடங்கப்பட்டு 1905 இல் சுமார் 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. கோதையாறு அணையே பேச்சிப்பாறை அணை எனப்படுகிறது. இத்தேக்கத்தில் 350 கோடி கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடிகிறது. இதன் மூலம் சுமார் 56,000 ஏக்கர் நிலம் பாசனம் பெற இயலுமென்று கூறப்படுகிறது. நாஞ்சில் நாட்டை நெற்களஞ்சியம் ஆக்குவதற்கு இந்த அணை பெரிதும் உதவுகிறது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு படகு செலுத்துதல் சுகமான அனுபவமாகும். அணையின் எதிர்ப்புறம் வரை செல்ல குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
பெருஞ்சாணி அணை:
இந்த அணை கன்னியாகுமரியிலிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதுவும் ஒரு சுற்றுலாத்தலமாகும். இந்த அணை 1948 இல் தொடங்கப்பட்டு 1958இல் முடிக்கப்பட்டது. 50 இலட்சம் ரூபாயில் செலவில் கட்டப் பட்டது.இந்த அணையில் உண்டாக்கப்பட்ட நீர்த்தேக்கம் 33.34 சதுர மைல் பரப்பாகும். இந்நீர்த் தேக்கம் திருவனந்தபுரத்தின் தென்கிழக்கு, 58 கி.மீ. தொலைவிலும், குலசேகரம் என்னு மிடத்திலிருந்து 10 கி.மீ.கிழக்கிலும் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் 6000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.
கீரிப்பாறை: காளிகேசம்:
பெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தில் சிறு அம்மன் கோவில் உள்ளது.
கீரிப்பாறையிலிருந்து மேலே செல்வதற்கு நல்ல வண்டித்தார்ச்சாலை உள்ளது. சிற்றுந்துகள் மூலம் போகலாம். இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என்கின்றனர். சிறுசிறு சரிவுகளில் அருவியாகவும் காட்சியளிக்கிறது. பாறைகளைக் குடைந்தும், அறுத்துக் கொண்டும் ஓடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். ஆறு அறுத்த பாறை ஒன்றில் பழங்குடியினர் இருந்த தற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன.
பத்மநாபபுரம்:
கன்னியாகுமரியிலிருந்து 45 கி.மீ. உள்ளது. மன்னர் கால திருவாங்கூரின் தலைநகராக கி.பி. 1744 முதல் இருந்தது. அரண்மனை 6 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த அரண் மனையில் அரசர், அமைச்சர், அலுவலர்களுக்கு, பல கட்டடங்கள் இருக்கின்றன. இங்குள்ள இராமசாமி கோவிலில் இராமாயணக் கதை 45 காட்சிகளாக சித்தரிக்க ப்பட்டுள்ளது. இந்த அரண்மனை காலை ஒன்பது மணிமுதல் மாலை 5 வரை திறந்திருக்கும். திங்கள் விடுமுறை.
இங்கு காணவேண்டியவை:
இந்திர விலாசம், தாமிரக் கடிதங்கள், கல்வெட்டுகள், பழங்கால நாணயங்கள், போர்க்கருவிகள் போன்றவை காட்சிக் கூடத்தில் உள்ளன. இதுதவிர, ஒரே மரத்தால் செய்யப்பட்ட சன்னல், வேனிற்காலத்தில் அரசர் படுக்கும் கல்கட்டில், பெரிய விருந்து மண்டபம், ஒரே மரத்தில் செய்யப்பட்ட தூணும் அதில் கடைந்தெடுத்த வளையமும், தூண்ட மணிவிளக்கு, சித்த மருத்துவக் கட்டில், அரசரின் வாள், நீராடுமிடம், பெரிய விலங்கும் காணத்தக்கவை. 17ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கடிகாரம் புகழ்பெற்றது. இது தவிர ஓவியக்கூடம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம். இங்கு திருவிதாங்கூர் அரசர் முடிசூட்டு விழா, திப்புவின் தோல்வி, நாஞ்சில் நாட்டுத் தமிழர்களால் மன்னர் காப்பாற்றப்பட்டது போன்ற சம்பவங்கள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
சிதாறல் என்கிற திருச்சாரத்து மலை:
இவ்வூர் கன்னியாகுமரியிலிருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மலை மீது கோவில் அமைந்துள்ளது. இது சிறந்த சுற்றுலாத் தலம். சமணச் சிற்பங்கள் காணத் தக்கவை. நாகர்கோவில் நாகராஜா கோவிலும், திருச்சாரணத்து மலையும் கன்னியா குமரியில் சமணம் இருந்ததை பறைசாற்றுகின்றன.
இங்குக் கிடைத்துள்ள கல்வெட்டு மூலம் கிடைக்கும் செய்தி:
இக்கல்வெட்டு விக்ரமாதித்ய வரகுணப் பாண்டியன் காலத்து இக்கோவில் முத்துவாள நாராயண குரத்தியார் என்ற சமண சமயப் பெண் துறவியால் எழுப்பப்பட்டது என்றும், கோயிலுக்கு ஒரு விளக்கும், தங்க மலரும் அவர் காணிக்கை யாகக் கொடுத்தார் என்றும் தெரிகிறது. அரிட்டநேமி படாரரின் மாணக்கியாகிய குணந்தாங்கி குறத்திகள் திருச்சாரத்துமலை படாரியார்க்குப் பொன் நகைகளும், பூவும் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறது. மேலும் இங்குச் சமணர்களின் கல்வி நிலையம் இருந்ததற்கான ஏதுக்கள் கிடைக்கின்றன. பெண் சமணத் துறவியின் மக்களுக்குக் கல்வி புகட்டியதும், மக்களிடம் சமணப் பிரச்சாரம் செய்ததும் தெரியவருகிறது.
திருநந்திக்கரை குகைக் கோயில்:
இவ்வூரும் பழங்கால சமணத் தலமாகும். பின்னர் சைவர்களுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இங்குள்ள கபோதரத்தில் உள்ள மாதேவர் ஓவியம்தான் சேரர் கால ஓவியங்களில் கிடைத்த ஒரே சான்று. விக்கிரமாதித்ய வரகுணன் திருநந்திக் கரையில் தங்கி இருந்ததாகவும், ஒரு சமணத் துறவியியின் முன்னிலையில் தெங்கு நாட்டுக் கிழவன் மகள் முருகன் சேத்தியை திருமணம் செய்து கொண்டதாகவும், அரசியின் வாழ்க்கைக்குத் தேவையான நிலங்களை விட்டுக் கொடுத்ததாகவும் வரகுணன் காலத்திய செப்பேடு கூறுகிறது. இவ்வூர் பார்க்க வேண்டிய ஓரூராகும். பாறையில் அமைக்கப்பட்ட கோயிலுள் புகுவதற்கு வாயிலும், மழைநீர், வாயிலுக்கு வராமல் மேலே ஓடையும் அழகுபெற அமைக்கப்பட்டுள்ளன.
திருவட்டாறு:
முப்புறமும் ஆறு சூழ்ந்த தீபகற்பம் இவ்வூர். நாகர்கோவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது. வளைந்து வட்டமாக ஆறு இருப்பதால் வாட்டாறு என்று ஆற்றின் பெயரே நிலைத்து விட்டது. கேரள வர்ம ராஜா என்ற திருவிதாங்கூர் படைத்தலைவன், திப்பு சுல்தான் படையை வென்றதும் இங்குதான் படை சங்கீதர்த்தனம் என்ற வெற்றி விழா நடத்தியதாகக் கூறுவர். இக்கோவிலின் பழமையைக் காட்டும் வேணாட்டு அரசன் வீர உதயமார்த்தாண்ட வர்மா திருவடி கல்வெட்டு. கி.பி. 1174 இல் வடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயம், 108 வைணவ தலங்களில் ஒன்று. 13 மலைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாக திகழ்கிறது. நம்மாழ்வார், பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் முதலியோரின் பாடல் பெற்றத் தலம். இக்கோவிலில் பார்க்கத்தக்க கல், மரசிற்பங்கள் உண்டு. 18 அடி சதுரம், 3 அடி உயரமும் உள்ள ஒற்றைக்கல் மண்டபம். தூண்களில் செதுக்கப்பட்டுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட லட்சுமி உருவங்கள் பலவிதங்களில் காட்சி தருகின்றன. கோயிலின் கூரையில் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சங்கலி தொங்குவதைக் காணலாம். அது போலவே கோயிலின் கதவிலும் அதிசயித்தக்க வேலைப்பாட்டுடன் சிற்பங்கள் உள்ளன. இக்கோவில் தமிழக-கேரள கலைத்திறனுக்கு சான்றாக விளங்குகிறது. சுவர்களில் வண்ண ஓவியங்கள் இன்றும் அழியாமல் காண்போரைத் தம்வசம் இழுக்கின்றன. சமய சுற்றலா தளமாக இதனைக் கொள்ளலாம்.
வேளிமலைக் குமாரர் கோவில்:
ஆறு படை வீடுகளுள் ஒன்றாகக் குறிப்பிடப்படும் 'ஏரகம்' இதுதான் என்பது ஆய்வாளர்கள் முடிவு. அதற்கு சான்றாக அவர்கள் காண்பிப்பது இதுதான். ஈர உடையுடன் ஆலயஞ்சென்று வழிபடும் முறை ஏரகத்தில் இருப்பதாக திரு முருகாற்றுப்படையில் கூறப்படுகிறது. 'ஏரகம்- மலைநாட்டகத்தொரு திருப்பதி' என்பதால் மலைநாடு என்பது சேரநாட்டிலுள்ள இந்த குமாரக் கோவிலையே குறிப்பிடுகிறார் உரையாசிரியர் என்பது தெளிவாகிறது. வேளி என்னும் சொல் திருமணம் என்ற பொருளில் மலையாள மொழியில் வழங்கி வருகிறது. முருகன் இங்கு வள்ளி யுடன்தான் இருக்கிறார். இவ்வூர் நாகர் கோவிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. இயற்கை சோலை சூழ இவ்வூர் காணப்படுகிறது. மலைமேல் கோவில் அமைந்துள்ளது. 38 படிகள் ஏறவேண்டும். மூலவரான முருகன் எட்டடி உயரத்தில் காட்சியளிக்கிறார். வள்ளியம்மை 6 அடி உயரம். ஸ்தல விருட்சம்: வேங்கை மரம்; வள்ளித் திருமணத்தைக் குறிக்கும்படியான இடங்கள் உள்ளன. வள்ளிச்சோலை, கிழவன் சோலை என்பன அவை. முருகன் வள்ளியை மணந்த திருமண நிகழ்ச்சியே இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இதை 'குறவன் படுகளம்' என்று அழைக்கின்றனர். இந்நிகழ்வில் குறவர்களே பங்கேற்கின்றனர். முருகப்பெருமானைக் குறிக்கும் வேலன், வேள் என்ற சொற்களே குமரனைக் குறிக்கவேளி என்றாகி விட்டது என்பது ஆய்வாளர் முடிவு.
ஒளவையாரம்மன் கோவில்:
அவ்வையை அம்மனாக்கி 'ஒளவையாரம்மனாக' வழிபடும் இடமாக இவ்வூர் உள்ளது. நாகர்கோவிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டில் ஒளவையாருக்கு கோயில் உள்ள ஒரே கோவில் இவ்வூராகும். இது தவிர ஒளவையார் சிலை குறவன் தட்டுவிளை குடைவரைக் கோவிலில் காணப்படுகிறது.
பிற கோவில் ஊர்கள்:
அகத்தீஸ்வரம், அழகம்மைக் கோவில், அதிசய விநாயகர் கோவில் மகாதேவர் ஆலயம், திப்பரமலை கண்ணன் கோவில், கருங்கல் பகவதி, தோவாளை மால் மருகன் கோவில், மதுசூதனர் ஆலயம், ஜயந்தீசர் ஆலயம், பூதலிங்க சுவாமி ஆணையம், மகிசாசுரமர்த்தினி கோவில், நீலகண்ட சுவாமி கோவில், வெள்ளிமலை குமரன் கோவில், மருங்கூர் முருகன் கோவில், நாகராசன் ஆலயம், மண்டைக்காடு பகவதி கோவில், கிருஷ்ணன் கோவில், மாகாளி அம்மன் கோவில், தழுவிய மகாதேவர் ஆலயம், திருவாழ்மார்பர் ஆலயம், மீனாட்சி கோவில்.
அய்யா வழி எனும் வைகுண்டசாமி இயக்கம்:
16 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு மூடப்பழக்க வழக்கங்கள் காரணமாக இந்தியாவில் வேறு எங்குமே காணமுடியாத அளவு தீண்டாமை கேரளத்தில் காணப்பட்டது. தீண்டாமையை எல்லோரும் அறிவோம். ஆனால் இங்கு 'காணாமை' என்னும் கொடிய பழக்கமும் பின்பற்றப்பட்டு வந்தது. ஒரு நம்பூதிரி பிராமணர் எதிரே வரும்போது அவருக்கு முன் நாயர், பிள்ளை, மற்ற சாதியினர் சற்று தூரம் விலகி நிற்கவேண்டும். தீயர், புலயர், ஈழவர், சாணார்கள் முதலியோரைப் பார்க்கவே கூடாது. இக்கொடுமையான வழக்கம் என்பது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. உயர்சாதியினர் பார்த்து ரசிக்க, தாழ்த்தப்பட்ட பெண்கள் தோளில் சீலை அணியக்கூடாது. ரவிக்கை உயர்சாதியினர் மட்டுமே அணிய வேண்டும் என்னும் மனிதாபிமானமற்ற முறையும் இருந்தது. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இதை எதிர்த்து வைகுண்டநாதர் என்ற சித்தர் சாணார்களில் தோன்றினர். இவரின் கருத்துக்கள்: சாணார்க்குல ஆண்கள் தலையில் முண்டாசுக் கட்டிக் கொள்ள வேண்டும். தினமும் குளித்து வழிபாடு செய்ய வேண்டும். எல்லோருக்கும் பொதுவான கிணற்றைத் தோண்டி இதில் எல்லோரும் நீர் அள்ளுங்கள் என்றார். அவருடைய கருத்துகள் நாடார் குலத்தில் விழிப்புணர்ச்சிகளைக் கொண்டு வந்தன. எல்லோரும் கூடுவது முதலில் ஏற்பட்டது. எல்லோரும் ஒன்று என்ற கருத்து உருவானது. இது நம்பூதிரிகளுக்கு பெரும் பீதியைக் கிளப்பிற்று. மேலும் சித்தர் தம்மை 'விஷ்ணுவின் அவதாரம்' வைகுண்டசாமி என்று பெருங்கூட்டத்தில் பேசி வந்தார். இதை சாக்காக வைத்து மார்த்தாண்ட வர்மாவிடம் விசயத்தை மாற்றி, மன்னர் மட்டுமே திருமாலின் அம்சம்; தாழ்த்தப்பட்டவன் எப்படி விஷ்ணுவின் அம்சமாக இருக்க முடியும்? என்ற கேள்வியை எழுப்பி மன்னரைக் குழப்பினர். மன்னர் சித்தரை சிறை வைத்தார். அவர் சற்றும் தம் வழியில் இருந்து மாறவில்லை. கடைசியாக மன்னருக்கும் வைகுண்டசாமிக்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. பொதுமக்களிடத்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதே அது. அதன்பிறகு வைகுண்டசாமி அய்யா வெளியே வந்து சாமித்தோப்பில் இருந்து மறைந்தார். இதே காலகட்டத்தில் சாணார்களிடம் கிருத்துவமும் பரவியது. 'தோள்சீலை போராட்டம்' தொடங்கியது. பல உயிர்களைத் தியாகம் செய்து மன்னரிடமிருந்து கைத்தறி ரவிக்கை (யிணீநீளீமீ) அணியும் உரிமையை சாணர்கள் பெற்றனர். பிறகு அய்யா வழியை பின்பற்றியதன் பலனாலும், கிருத்துவ மதமாற்றமும் கல்வியும் சாத்தியமாயிற்று. சாதி சமய உரிமை கோரிக்கை போன்றவற்றினால் 'சாணார்' என்ற பெயரைத் துறந்து 'நாடார்' என்ற வணிக வர்க்கமாக உயர அய்யா வழி உதவியது. இந்த சமூக மாற்றம் இம்மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் விழிப்புணர்ச்சியைக் குறிக்கும் வரலாற்று நிகழ்வாகும்.
பழங்குடியினர்:
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியல், பெருஞ்சாணி, பேச்சிப்பாறை, வெள்ளாம்பி, கூவைக்கல், ஐந்து காணி என்னும் இடங்களில் 'காணிக்காரர்' மலையின் மக்கள் இருக்கின்றனர். இன்று ரப்பர் தோட்டங்களில் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். குக்கிராமங்களில் தங்கள் பழைய முறையிலான விவசாயம், வேட்டை போன்றவைகளை இன்றும் விடவில்லை. இவர்கள் தமிழ்தான் பேசுகின்றனர். 'கொக்கரை' என்ற இசைக் கருவியை நன்கு வாசிக்கின்றனர்.
இயற்கை வளங்கள்
கனிம வளம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு எங்குமே கிடைக்காத 'இல்மனைட்' மணலில் கிடைக்கிறது. இதிலிருந்து டிட்டானியம், ரூட்டைல், மோனசைட், சர்க்கான் போன்ற பிற கனிமங்கள் பெறப்படுகின்றன. இந்தக் கனிவளங்கள் மணலில் இருப்பதால் மணல் பொன்வண்ணமாக காட்சியளிக்கிறது. இது தவிர பலவித வண்ண மணல்கள் கன்னியாகுமரியில் கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இல்மனைட்டில் 8% கன்னியாகுமரியிலிருந்து கிடைக்கிறது.
இல்மனைட்டிலிருந்து டிட்டானியம் பிரித்தெடுக்கப்பட்டு டிட்டானியம் ஆக்ஸைடு வெடிமருந்து, வெள்ளை பெயின்ட் செய்ய பயன்படுகிறது. இதுதவிர கடைசல் வேலைக்கு டிட்டானியம் கலந்த எஃகு பயன்படுத்தப்படுகிறது. வர்ணங்கள் ஒளிகுன்றாமல் இருக்கவும், ரப்பர்களில் ஏற்படும் வெடிப்புகளைத் தவிர்க்கவும், பிளாஸ்டிக் பொருள்களில் பளபளப்பு ஏற்படுத்தவும், தாள் தயாரிப்பதற்கும் இது
பயன்படுகிறது. தமிழகத்தில்- இங்கு மட்டுமே கிடைக்கும் மோனாக்சைட்டில் 10 விழுக்காடு தோரியம் காணப்படுகிறது. இது அணுகுண்டு செய்ய பயன்படுவதால் பாதுகாக்கப்படுகிறது.
அதிக வெப்பத்தைத் தாங்கும் சர்க்கான், பீங்கான் எஃகு தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இத்தொழில்கள் இன்னும் பெருமளவில் வளராத காரணத்தால், இந்த வளத்தை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. உப்புத்தாள் தயாரிக்க உதவும் கார்னட் மணல் மண்டைக்காடு முதல் கடியபட்டினம் வரை காணப்படுகிறது. கல்குரியஸ் என்னும் கடினமான பாறை வகைகள் இம்மாவட்டத்தில் பல இடங்களில் கிடைக்கின்றன. இது தவிர கிராபைட், சுண்ணாம்புக் கல் போன்றவையும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இரவிப்புதூர், மருங்கூர் முதலிய ஊர்பகுதிகளில் இரும்பு கலந்த கற்களும், ஆரல்வாய் மொழியிலிருந்து வெள்ளமடம் வரை சுண்ணாம்புப் படிவங்களும் படிவுகளாக உள்ளன.
காட்டுவளம்:
நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிகளவு மலையினை கன்னியாகுமரி மாவட்டம் பெறுகிறது. இதனால் இங்கு காடுகள் செழித்துக் காணப்படுகின்றன. காடுகளின் மொத்த பரப்பளவு 449 ச.கி.மீ. ஆகும். இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 4000 அடி வரை செல்கிறது. இங்கு யானை, மான், மிளாவு என்ற மான் வகை, சிறுத்தை, புலி, கரடி, பன்றி, உடும்பு, குரங்கு, செந்நாய், நரி முதலிய விலங்குகள் காணப்படுகின்றன. இங்கு தேக்கு, மட்டிப்பால், முன்னிலவு போன்ற மரங்கள் வளர்கின்றன. 800 ஏக்கர் பரப்பளவில் தேக்கு மரங்களும், 600 ஏக்கர் பரப்பில் தீக்குச்சி மரங்களும், 15 ஏக்கர் பரப்பில் அரக்கு உற்பத்திற்காக பூவன்மரத் தோட்டங்களும் வளர்க்கப் படுகின்றன. பல மருத்துவ மூலிகைகள் மருத்துவ மலையில் காணப் படுகின்றன.
வேளாண்மை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 'நாஞ்சில் நாட்டில்' மட்டுமே நெல் விளைகிறது. மற்ற இடங்களில் மரவள்ளிக் கிழங்கு, வாழை, சோளம், உளுந்து, பயறு, பருப்பு ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. நாஞ்சில் நாட்டில், சம்பா, வால் சிறுமுண்டதும் என்ற இருவகை நெல் வகைகள் பாரம்பரியமாக விளைவிக்கப்பட்டு வருகின்றன. நெல்லுக்கு அடுத்து தென்னை 40,000 ஏக்கரில் பயிராகிறது. கன்னியாகுமரி முதல் தேங்காய்ப் பட்டினம் வரை தென்னை வளர்க்கப்படுகிறது. நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் தென்னை நாற்றுப்பண்ணை உள்ளது.
பனைமரம்- கல்குளம், விளவங்கோடு, வட்டங்களில் மிகுந்து காணப்படுகிறது. நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பதநீர், பனை வெல்லம் போன்றவை பெறப்படுகின்றன. தோவாளை வட்டத்தில் ஆரல்வாய்மொழிப் பகுதியில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. ஊடுபயிராக நீண்ட இழைப் பருத்தி, மலைச்சாரல்களிலும் ரப்பர் தோட்டங்களிலும் பயிராகிறது.
பணப் பயிர்கள்:
அரசாங்க பழ ஆராய்ச்சி நிலையம் பஞ்சலிங்க புரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மா, பலா, கொய்யா, திராட்சை, மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா ஆகிய நாற்றுகள் வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் விளையும் வாழைப்பழ வகைகளில் ஏற்றம்பழம், மட்டிபழம், தேன் வாழை, செவ்வாழை போன்றவை சிறப்பு மிக்கவை. பொட்டல் பலாபழமும், சூரங்குடி மாம்பழமும் புகழ்பெற்றவை. பருவம் இல்லாத காலங்களில் கூட மாம்பழம் காய்ப்பது இங்கு மட்டும்தான். குழித்துறையில் முந்திரிக்கொட்டை தொழிற்சாலை உள்ளது.
அ) ரப்பர்:
தமிழகத்தின் ரப்பர் பால் உற்பத்தியில் கன்னியாகுமரியே முன்னிலை வகிக்கிறது. இங்கு 90 செ.மீ. மழையளவு பெறுவதால் மலேஷிய ரப்பரை விட தரம் உயர்ந்து காணப்படுகிறது. மகேந்திரகிரி, பால்குளம், அசம்புமலை, காரிமணி, பாலமூர், வேளிமலை, முக்கம்பாலா, குதிரைக்குழி, நியூ ஆலம்பாடி முதலிய இடங்களில் பெரும் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. சுமார் 5000 ஏக்கர் பரப்பில் உற்பத்தி நடைபெறுகிறது.
ஆ) தேயிலை: தோவாளை, கல்குளம் வட்டங்களில் 1200 ஏக்கர் பரப்பில் தேயிலை பறிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 3 இலட்சம் கிலோ கருப்புத் தேயிலை கிடைக்கிறது. காப்பி 200 ஏக்கரில் பயிராகிறது.
இ) மிளகு, பாக்கு, புகையிலை: விளவங்கோடு வட்டத்தில் மிளகும், தடிக்காரன் கோணம் மலையடிவாரத்தில் பாக்கும், தோவாளை, அகத்தீஸ்வரம், கல்குளம் வட்டங்களில் ஏராளமான இடங்களில் புகையிலையும் பயிராகின்றன.
சந்தைகள்:
கனக மூலம் சந்தை:
ஞாயிறு, வியாழன் ஆகிய இரு நாட்களில் வடசேரியில் கூடுகிறது. நெல்லை மாவட்டத்தின் பொருட்கள் இங்கு வந்து கோட்டயம் வரை செல்கின்றன. திருவனந்தபுரம் பகுதிகளுக்கு காய்கறிகளும், மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிக்கு தேங்காயும், கொச்சினுக்கு கருவேப்பிலையும் இங்கிருந்து செல்கின்றன.
திங்கள் சந்தை:
திங்கட்கிழமைதோறும் இரணியலில் கூடுகிறது. இது மொத்த வியாபாரத்திற்கு பெயர் பெற்ற இரண்டாவது சந்தை.
களியக்காவிளைச் சந்தை:
திங்கள், வியாழன் கிழமைகளில் கூடுகிறது. வெற்றிலை, இலவம்பஞ்சு விற்பனைக்கு பெயர் பெற்றது.
தாலியறுத்தான் சந்தை:
மகாதானபுரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கூடுகிறது. கால்நடைகள், காய்கறிகள், கிழங்கு வகைகள் இங்கு பெரியளவில் விற்பனையாகின்றன.
கருங்கல் சந்தை:
இங்கு புளி, மரச்சீனி, கருப்பட்டி, இறைச்சி வகைகளும் பெருமளவு கொள்முதல் செய்யப்படுகின்றன.
தொழில் வணிகம்:
குமரி மாவட்டம் இயற்கை வளம் செறிந்தது. இந்த வளம் இன்னும் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது. வேளாண்மை பொருள் உற்பத்தி தொழில்களே இங்கு பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகின்றன. தேசிய தொழில் வளர்ச்சிக் கழகம் இம்மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளவை என கணித்திருக்கும் தொழில்கள்: அலுமினியப் பொருட்கள், மீன் பிடிக்கும் எந்திரப் படகுகள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் தயாரித்தல், ரப்பர் ஷஂட், போம் ரப்பர், லெடக்ஸ் சிமெண்ட், நார்க் கயிறு, ரொட்டி, பிஸ்கட் செய்தல், மீன் பதப்படுத்துதல். தொழில் முனைவோர் இவற்றில் இறங்கலாம்.
கயிற்றுத் தொழில்:
தென்னையின் ஓலை, நார் ஆகியவற்றிலிருந்து கயிறு முறுக்கும் தொழில் இம்மாவட்டம் முழுவதும் காணப்படுகிறது. கொல்லங்கோடு, வைகாலூர், தேங்காய்ப்பட்டினம், பூந்துறை, குளச்சல், மணவாளக் குறிச்சி, பழைய கடை, ஈத்தாம்பொழி, மணக்குடி, மண்டைக்காடு, இராஜாக்கமங்கலம் முதலிய இடங்களில் இத்தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பனைத் தொழில்:
வாழை மரம், தென்னை மரம் போல பனை மரத்தின் ஒவ்வொரு பொருளும் தமிழகத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரஷ்கள் செய்வதற்கு பனந்தும்பு வெளிநாட்டில் தேவை இருப்பதால் விளவங்கோடு, கல்குளம் வட்டங்களிலிருந்து பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் துணைத் தொழில்களாக பனந்தும்பு செய்வது, பனைவெல்லம் காய்ச்சுவது, பனை ஓலைக் கூடைகள் முடைவது, விசிறி, முறம் தயாரிப்பும், பனம்-நுங்கு, கிழங்கு, காய், சர்பத், பதநீர் தயாரிப்பதும் தொழில்களாக விரிவடைந்துள்ளன.
எண்ணெய் தொழில்:
தென்னை மிகுந்திருப்பதால் எண்ணெய் ஆட்டும் தொழில் வளர்ந்துள்ளன. புல் தைலம் நறுமணப் பொருட்களில் சேர்க்கவும், மருந்துகள் செய்யவும் பயன்படுகிறது. பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உப்பளங்கள்:
உப்பு உற்பத்தி இம்மாவட்டத்தின் கடல்தொழிலில் முக்கியமானது. ஏறத்தாழ 6000 தொழிலாளர் இதில் ஈடுபட்டுள்ளனர். கேரளத்தின் தேவையை இம்மாவட்டம் நிறைவு செய்கிறது. புத்தளம், பால்குளம், கோவளம் தட்டாரிருப்பு, தாமரைக்குளம், குளச்சல் முதலிய ஊர்களில் இத்தொழில் சிறந்து விளங்குகிறது.
மீன்பிடிப்பு:
இம்மாவட்டத்தில் நடைபெறும் பெருந்தொழில்களில் மீன்பிடிதொழில் முக்கியமானது. 40 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 1500க்கும் மேற்பட்ட படகுகளும், 5000 மேற்பட்ட கட்டுமரங்களும் கொண்டு மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. மீன்பிடிதொழில் முக்கிய ஊர்களாக கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகள் விளங்குகின்றன. இம்மாவட்டத்தில் பிடிக்கப்படும் மீனின் அளவு ஏறத்தாழ 21,500 மெட்ரிக் டன்கள் ஆகும்.
மீன் பண்ணை:
தமிழக அரசின் முயற்சியால் மணக்குடி காயலில் 350 ஏக்கர் பரப்பில் ஒரு மீன் பண்ணை நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் பல வகை ஆய்வுகளை நடத்தி வருகிறது. சங்கு குளிக்கும் தொழிலும், மீன் எண்ணெய் எடுக்கும் சிறுதொழில் நிலையமும் செயல்பட்டு வருகின்றன. இனையம் என்னும் கிராமத்தில் மீனுலர்த்தும் கூடம் கட்டப்பட்டு, கருவாடுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
திருவாங்கூர் மினரல்ஸ் லிமிடெட்:
இம்மாவட்டத்தில் அரசு நடத்தும் மிகப்பெரிய தொழில் இதுவாகும். இத்தொழிற்சாலை மணவாளக் குறிச்சியில் அமைந்துள்ளது. அணு ஆராய்ச்சி துறையின் ஆளுகையின் கீழ் நடைபெறுகிறது. இதில் தமிழக அரசுக்கு 5 விழுக்காடு பங்கு உள்ளது. இங்கு எடுக்கப்படும் மண்ணில் இல்மனைட்டும், மோனசைட்டும் அணு ஆய்வுக்குப் பயன்படுவதால் மும்பையிலுள்ள டிராம்பேக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் இந்நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் அந்நியச் செலாவணி கிடைக்கிறது.
தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ):
இதுவரை டிட்கோ நிறுவனம் 45 தொழிற்பிரிவுகளைத் தோற்றுவித்துள்ளது. அதில் 10 தொழிற்பிரிவுகள் பொதுத்துறையின் கீழும், மீதமுள்ள 35 தொழிற்பிரிவுகள் கூட்டுத் துறையின் கீழும் நிறுவப்பட்டுள்ளன.
கைத்தறித் தொழில்:
குமரி மாவட்டத்தில் 2 இலட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 30 தறிகள் செயல்பட்டு வருகின்றன. கோட்டாறு, வடசேரி, இரணியல், மார்த்தாண்டம் முதலிய ஊர்கள் துணி நெசவுக்கு பேர் பெற்றவை. வடசேரியில் சாலியர்களும், கோட்டாற்றில் பட்டுநூல்காரரும் இத்தொழிலில் சிறந்துள்ளனர். திருப்பூருக்கு பிறகு குமரி மாவட்டமே கதர் உற்பத்தியில் சிறப்பிடம் பெறுகிறது. மீன்பிடி வலைகள்கூட கதர் நூலால் தயாரிக்கப்படுகின்றன. கையால் நுற்ற நுலைக் கொண்டு கதர் தேங்காய்ப்பூத் துண்டுகள் இம்மாவட்டத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
கூட்டுறவு நுற்பு ஆலை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நுற்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்தத் துறையில் 24,960 கதிர்களும், 3588 முறுக்கு நூல் கதிர்களும், 960 கோன் வைண்டிங் உருளைகளும் உள்ளன. 20,40,60 எண்ணிக்கை கொண்ட நூல்கள் இங்கு தயாராகின்றன. ஆண்டொன்றுக்கு ரூ.6 கோடி விற்பனையாகிறது. இது தவிர இம்மாவட்டத்தில் "நாகம்மாள் பஞ்சாலை" என்பதும் செயல்பட்டு வருகிறது.
ஓடு செய்தல்:
கொட்டாரத்திலும், செட்டிக்குளத்திலும் ஓடு செய்யும் தொழில்சாலைகள் உள்ளன.
தேனீ வளர்ப்பு:
மார்த்தாண்டத்தில் தேனி வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் 1937 இல் தோற்றம் கொண்டது. சுமார் 80,000 பங்கு மூலதனத்துடன் தொடங்கி 1000 உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டது. தேனிக் குடும்ப எண்ணிக்கை 85,000 ஆகும். தேன் மெழுகு தயாரிப்பது இச்சங்கத்தின் துணைத் தொழிலாகும்.
பால் உற்பத்தி:
1949 முதல் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 4,41,725 லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர் சங்கங்களால் 8000 குடும்பத்தினர் பயனடைகின்றனர். 'கன்னியா மில்க்' பாலுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
பிற தொழில் ஊர்கள்:
ஆரல்வாய்மொழி: சோளம், கம்பு, கடலை, விளைச்சல் அதிகம். கீரைக்கு பெயர் பெற்றது. குழித்துறை: முந்திரி பருப்பு விற்பனையுள்ள ஊர். கோட்டாறு: மிளகாய், நெல் மண்டிகள் நிறைந்த ஊர். தோவாளை: முல்லை, பிச்சி, அரளி, மருக்கொழுந்துக்கு புகழ்பெற்றது.
தேங்காய்ப்பட்டினம்: தேங்காய், கயிறு, மீன்பிடி தொழிலுக்கு பேர் போனது.
நல்லூர்: பால், நெய், தயிர் உற்பத்தி.
புத்தேரி: மருத்துவமனை நிறைந்தது.
மிளகுமூடு: தையல் தொழில் பயிற்சி.
மயிலாடி: கல் சிற்பத் தொழில்.
முட்டம்: மீன், தவளை பாடம் பண்ணும் தொழில்.
வெள்ளமடம்: கால்நடை பண்ணை.